இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், சுமார் 1,000 பேர் கொல்லப்பட்ட பேரழிவுகரமான டிட்வா சூறாவளியை தவறான முறையில் கையாண்டதால் அதிகரித்துவரும் வெகுஜன கோபத்தை அடக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்துமாறு ஜே.வி.பி./தே.ம.ச.யின் சிரேஷ்ட அமைச்சர், பொலிசாருக்கு உத்தவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக மற்றும் பல அமைச்சர்களை இலக்குவைத்து சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் “மிகத் தீங்கான தாக்குதலுக்கு” பதிலளிப்பதற்காக என உருவாக்கப்பட்ட இந்த நடவடிக்கை, உண்மையில் எதிர்க் கருத்துக்களை மௌனமாக்குவதற்கான வெளிப்படையான முயற்சி ஆகும்.
டிட்வா சூறாவளி தீவின் பெரும் பகுதிகளை நாசமாக்கிய பின்னர், உடனடியாக திசாநாயக இந்தப் பிரகடனத்தை வெளியிட்டார். அப்போதிருந்து ஒரு கொடூரமான அவசரகால சட்டத்தின் கீழ் இலங்கை இருந்து வருகின்றது. நவம்பர் 28 அன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், “எமது நாட்டை முன்னர் இருந்ததை விடவும் சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு” ”சட்டரீதியிலான பாதுகாப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு” இது அவசியம் என்று கூறியே, இந்த நகர்வை நியாயப்படுத்தினார்.
குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமசதாச போன்ற எதிர்த்தரப்புகள் ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள பரஸ்பர ஆதரவை அடிக்கோடிடும் வகையில், சமூக அமைதியின்மையை முன்கூட்டியே தடுப்பதற்காக, ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துவதற்கு அவசரகாலத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தினர்.
திசாநாயக கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உரையில், அவசரகாலச் சட்டங்கள் அடக்குமுறைகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாது என உறுதியளித்திருந்தாலும், ”மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற சாட்டின் கீழ் கடுமையான சிக்கன நடவடிக்கையை திணிப்பதற்கு அது பயன்படுத்தப்படும் என உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்தது. அரசாங்கம் அந்த திசையில் வேகமாக நகர்கின்றது என்பதையே அவரது அமைச்சரின் சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
சூறாவளியின் பேரழிவுகரமான விளைவுகள் தொடர்ந்தும் வெளிப்பட்டுகொண்டிருக்கையில், டிசம்பர் 2 அன்று ஜே.வி.பி.யின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, துண்டுப் பிரசுரங்கள், சமூக ஊடங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்கள் ஊடாக பேரழிவு பற்றிய ”திரிபுபடுத்தப்பட்ட” அல்லது ”போலியான” தகவல்களைப் பரப்பும் ஒரு ”திட்டமிடப்பட்ட முயற்சி” நடைபெறுவதாக கூறிக்கொண்டார். வெளிநாட்டில் உள்ள தனிநபர்களும் தொடர்புபட்டுள்ளார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் ஊடகத் துணை அமைச்சர் கௌசல்ய ஆரியரத்னவும் கலந்து கொண்ட, மாலபே பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்திலேயே இந்த கருத்துகளை வட்டகல முன்வைத்தார்.
“இது இன்னொரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கோ தொடர்ந்தால் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கட்டளைகளும் அவசரகால ஒழுங்குமுறையும் இந்த நிலைமையை சமாளிக்க போதுமானது” என வட்டகல எச்சரித்தார். அவர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் 2025 நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட இலக்கம் 2464/31 விசேட வர்த்தமானியின் 20, 21 மற்றும் 22 உறுப்புரைகளை மேற்கோள் காட்டினார்.
வட்டகலவால் மேற்கோள் காட்டப்பட்ட விதிமுறைகள், பரந்த விடயங்களை உள்ளடக்குகின்றன. 'பொது எச்சரிக்கை' அல்லது 'பொது சீர்குலைவை' ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு 'பொய்யான' விடயங்களாக இருக்கக்கூடியவற்றை -வாய்மொழியாகவோ, அச்சு மூலமாகவோ, இலத்திரனியல் வழியாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு முறைமைகள் மூலமாகவோ- அறிவிப்பது, வெளியிடுவது அல்லது பரப்புவதை 20வது உறுப்புரை தடை செய்கின்றது.
அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் செய்யப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பதிலிறுப்பாக ஒருவர் தெரிந்துகொண்டே போலியான தகவலை வழங்கினால் அல்லது “அவ்வாறு செய்தமைக்கான நம்பந்தகுந்த காரணங்கள் இருந்தால்” உறுப்புரை 21 அதை குற்றமாக கருதுகின்றது.
இந்தச் சட்டங்கள், ஜனாதிபதி அல்லது அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யப்படும் தாக்குதல்கள் சம்பந்தமான விடயத்துக்கும் அப்பால் வெளிப்படையாகவே விரிவாக்கப்பட்டுள்ளது. அவை இந்தப் பேரழிவு சம்பந்தமாக அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கு அல்லது இதற்கான முன்தயாரிப்பில் அதன் தோல்வி சம்பந்தமான எந்தவொரு விமர்சனத்தையும் முற்றுமுழுதாக குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தபட முடியும். விதிமுறை மீறல்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது சில குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை விதிக்கப்படலாம் என வட்டகல சேர்த்துக்கொண்டார்.
அத்தகைய உள்ளடக்கங்களை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக 20 புகார்கள் குற்றவியல் விசாரனை திணைக்களத்தில் தாக்கல் செய்யப்ட்டுள்ளதாக அமைச்சர் வெளிப்படுத்தினார்.
அவர்களை விசாரணைக்கு அழைத்த பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். ஜே.வி.பி/தே.ம.ச. அரசாங்கத்தின் ஆழமான ஜனநாயக-விரோத பண்பை அம்பலப்படுத்திய அவர், ”நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற” அல்லது ”போலியான” உள்ளடக்கங்களைப் பகிரும் நபர்களை வெறுமனே சந்தேக நபர்களாக” அன்றி ”குற்றவாளிகளாக” நடத்துமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவு, அப்பாவி என்ற அனுமானத்தை நிராகரித்து, மாற்றுக் கருத்தை முன்கூட்டிய குற்றமாக்குமாறு சட்டத்தை அமுலாக்குவோரை ஊக்குவிக்கின்றது. இது வெகுஜன கோபம் அதிகரிக்கும் போது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை மிரட்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும்.
இந்த அமைச்சரின் கருத்துக்களை ஊடகவியலாளர் அமைப்புகளும் சிவில் உரிமை ஆதரவாளர்களும் உடனடியாக கண்டித்தனர். இந்தக் கட்டளையை கண்டனம் செய்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA),” முன்னர் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஆதரித்தவர்களே இப்போது அதை ஒழிக்குமாறு கட்டளையிடுகின்றனர், இது அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிரான பாதையில் நகர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது”, எனத் தெரிவித்து. இந்த அமைப்பு, கடந்த ஒரு ஆண்டில் ஜே.வி.பி./தே.ம.ச.யின் கீழ் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தப்பட்ட பல சம்பவங்கைளையும் சுட்டிக்காட்டியது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட, சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் (IFJ) தகவலைப் பெறுவதற்கான பொதுமக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கவும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தது.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
நவம்பர் 22 அன்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகாரை அடுத்து அருண பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மகிந்த இல்லப்பெருமவை விசாரிப்பதற்காக இரகசிய புலனாய்வுத் திணைக்கள குழு ஒன்று அதன் தலைமையகத்திற்கு சென்றிருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரச தொழில் விண்ணப்பங்கள், அடையாள அட்டைகள் மற்றும் பிற செயல்முறைகளுக்குத் தேவையான பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கு இப்போது உள்ளூர் பொதுப் பாதுகாப்புக் குழுக்களின் ஒப்புதல் தேவைப்படும் என்று நவம்பர் 19 அன்று வெளியான பிரதான செய்தியில் பிழையான மற்றும் தெளிவற்ற தகவல்களை அந்தச் செய்தித்தாள் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாருக்கு எதிராக செய்தியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் தெளிவான ஆதரத்துடன், ஊடகங்களில் இருந்து பலமான எதிர்ப்புக்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பதாக ஆகஸ்ட் 17 அன்று பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவு (CTID), போர் குற்றங்களால் பலியானவர்களின் நுாற்றுக்கணக்கான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் தோண்டியெடுக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி பற்றி செய்தி வெளியிட்டமை தொடர்பாக, முல்லைத்தீவில் உள்ள தமிழ் பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை குமணணை விசாரணைக்கு அழைத்திருந்தது.
டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான தி ஐலண்ட் பத்திரிகையின் தலையங்கத்தில், 1980களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. அரசியல் எதிரிகளை பாசிச முறையில் அடக்கியதை நினைவு கூர்ந்தது: “ஜே.வி.பி.க்கு எதிர்ப்புகளை அடக்கும் வரலாறு உண்டு; பழைய பழக்கவழக்கங்கள் எளிதில் மறைவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த காலத்தில், அது அர்த்தமற்ற வன்முறையை நம்பியிருந்தது, ஆனால் இப்போது ஒழுங்கு மீறிய சமூக ஊடக ஆர்வலர்களைக் கட்டுப்படுத்தும் சாக்குப்போக்கின் கீழ் அதே இலக்கை அடைய அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது.”
எவ்வாறாயினும் இந்த ஆசிரியர் தலையங்கமானது எழுந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை அடக்குதே இந்த அவசரகாலச் சட்டததின் உண்மையான நோக்கம் என்பதைக் கூறுவதை தவிர்த்துள்ளது. இது அவசரகால அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை ”நிறுத்துமாறு” அரசாங்கத்திற்கு பிரயோசனமற்ற வேண்டுகோள் விடுப்பதுடன் முடிக்கின்றது.
டிட்வா சூறாவளிப்பேரழிவு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தினதும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையினதும் திவால் நிலையை முற்றிலுமாக அம்பலப்படுத்துகின்றது. இது அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, இறுதியில் தசாப்பதகால புறக்கணிப்பு மற்றும் ஊழலில் இருந்து தலைதூக்கிய, இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கான பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவித்துக்கொள்ளத் துடிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும், ஒரு ஆழமான அரசியல் நெருக்கடி ஆகும்.
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மனித உயிர்களைப் பாதுகாக்கக் கூடிய, சூறாவளியின் தாக்கத்தை குறைத்திருக்க கூடிய நவீன முன்னறிவிப்பு முறைமைகளில் முதலீடு செய்யவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் தவறிவிட்டன. இப்போது இந்தப் பேரழிவு சம்பந்தமாக வெற்று வாய்ச்சவடால்களை விடுக்கும் அதேவேளை, அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபத்தைப் பற்றிய பீதியினால் ஐக்கியப்பட்டுள்ளன.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகின்றது. ஜனாதிபதி திசாநாயக மற்றும் அவரின் அமைச்சர்களும், எந்த அளவிலான இயற்கை பேரழிவுகளும், கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கான தமது அர்ப்பணிப்பை மாற்றாது எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். அதிகாரிகள், பல ஆயிரம் கோடி டொலர்களில் கணிப்பிடப்பட்டுள்ள மீள்கட்டுமான செலவுகளின் சுமையை உழைக்கும் மக்களே சுமக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எதிர்ப்புகளை முன்கணித்துள்ள அரசாங்கம், அதன் தோல்விகள் மீதான வரையறுக்கபட்ட விமர்சனங்களுக்கு கூட தண்டனை கொடுக்க அவசரகால ஒழுங்குமுறைகளை திணிப்பதன் மூலம் பதிலிறுத்துள்ளது.
