இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
மார்ச் 17 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 'ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை நிறுத்து' என்ற தலைப்பில் சோ.ச.க., ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆகியவை ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து zoom மூலம் கூட்டத்தில் பங்குபற்ற விரும்புவோர் இந்த இணைப்பில் பதிவுசெய்துகொள்ளுங்கள்.
ஈரான் மீதான தாக்குதலின் அப்பட்டமான சட்டவிரோதத் தன்மை, மத்திய கிழக்கில் உருவாகி வரும் பேரழிவுச் சூழல், மற்றும் உலகப் போராக வெடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பணிகள் ஆகியவற்றை சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் விளக்கினர். WSWS தலைவர் டேவிட் நார்த் எழுதிய, “ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்போம்!” என்ற அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளை அவர்கள் விநியோகித்தனர்.
தொழிலாளர்களும் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
கொழும்பின் தெற்கில், ரத்மலான ரயில் ஒழுங்குபடுத்தல் நிலையத்துக்கு அருகே சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களைச் சந்தித்த சமீர என்ற இளம் தொழிலாளி, தான் இப்போரை “முற்றிலும் எதிர்ப்பதாகக்” கூறினார்.
“ஈரான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிப்பதே இதன் நோக்கம் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார். “ஈரானிய மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்காக இந்தப் போர் தொடுக்கப்படுகிறது என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறுவது ஒரு அப்பட்டமான பொய்.”
அமெரிக்காவிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுக்கும் கொடூரமான அடக்குமுறை குறித்து கருத்து தெரிவித்த சமீர, “தன் சொந்த நாட்டில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் ஒரு ஆட்சியாளர், மற்றொரு நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போர் தொடுக்கிறார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்றார்.
பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்கள் உட்பட பொது உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசப்படுவது குறித்தும், குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள் கொல்லப்படுவது குறித்தும் அவர் கோபமாகப் பேசினார்.
போரின் பரந்த தாக்கங்கள் குறித்துப் பேசிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தைச் சுட்டிக்காட்டினார்.
“இலங்கையைப் பார்த்தால், பெரும்பாலான ஆடை உற்பத்திகள் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேயிலை முக்கியமாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவைதான் நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள். போர் தொடர்ந்தால் அது இலங்கையின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணியாக அமையும். நீங்கள் சொல்வது போல், போர் தொடர்ந்தால் ரஷ்யாவும் சீனாவும் இதில் தலையிட வலுவான வாய்ப்பு உள்ளது. அணு ஆயுத உலகப் போர் ஏற்படுவதற்கான உண்மையான ஆபத்து உள்ளது.”
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டிக்கவே இல்லை என்றும் சமீர குறிப்பிட்டார். நடுநிலை வகிப்பதாகக் கூறினாலும், 'நடைமுறையில் அது அமெரிக்காவுடன் இணைந்த கொள்கையைப் பின்பற்றுகிறது' என்று அவர் கூறினார்.
போரை நிறுத்த என்ன செய்ய முடியும் என்று சமீர கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் ஒரு உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் விளக்கினர். இந்த விவகாரங்களை மேலும் விவாதிக்க மார்ச் 17 அன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று சமீர கூறினார்.
மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவரான பிம்சர கூறியதாவது: 'அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் தாக்குதலை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். வெனிசுலா போன்ற நாடுகளைக் கைப்பற்ற வேண்டுமெனில் அல்லது ஈரானின் தலைவர்களைக் கொல்ல வேண்டுமெனில், ஜனாதிபதி ட்ரம்ப் எந்த சட்டத்தையும் மதிக்காமல் அதைச் செய்வார்.'
ஈரான் மீதான தாக்குதல் என்பது வெறுமனே ஒரு தனிநபரின் விருப்பத்தின் விளைவு அல்ல, மாறாக அது நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்கு சேவை செய்வதுடன், அதற்கு விலை கொடுக்க தொழிலாள வர்க்கத்தை நிர்ப்பந்திக்கவே வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பிரச்சாரகர்கள் விளக்கினர்.
இந்தியா ஏற்பாடு செய்த கடற்படை கண்காட்சியில் இருந்து திரும்பி வந்த ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், கப்பலில் இருந்து 34 மாலுமிகளை மீட்க கடற்படையை அனுப்பியதிலும், மற்றொரு ஈரானிய கப்பலில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாலுமிகளை இலங்கையில் தங்க அனுமதித்ததிலும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மாணவர்கள் பாராட்டினர்.
'ஈரானிய மாலுமிகளை மீட்பது பற்றி இலங்கையின் 'மனிதாபிமான' தோரணையை அமெரிக்க குறிப்பு அம்பலப்படுத்துகிறது' என்ற WSWS கட்டுரையை மேற்கோள் காட்டிய சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், 'திசாநாயக அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர தூதர்களால் கட்டளையிடப்பட்டபடி, அவற்றின் இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு இணக்கமான இடைத்தரகராகவே செயல்பட்டது' என்று விளக்கினர்.
தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து கலந்துரையாடல் திரும்பியது. 'மத்திய கிழக்குப் போர் வெடித்ததிலிருந்து, எண்ணெய் விலை இரண்டு வாரங்களுக்குள் 2022 ஆம் ஆண்டை விட அதிகமாக உயர்ந்துள்ளதுடன் மேலும் அதிகரிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன,' என்று மாணவர்களில் ஒருவர் கூறினார்.
கொழும்பில் ஒரு பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் கருத்து தெரிவித்தார்:
'ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என்ற பொய்யைப் போலவே. ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தாக்கப்படுகிறது என்ற ட்ரம்பின் கூற்று ஒரு பொய். 2025 இல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் உள்ள பல அணு தளங்களை குண்டுவீசித் தாக்கிய பிறகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார். இருப்பினும், 28 பெப்ரவரி 2026 அன்று ஈரானின் அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அவர் மீண்டும் தாக்குதலை நியாயப்படுத்தினார்.'
மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவின் மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் (PWAC) உறுப்பினர்கள் மார்ச் 8 அன்று போரைப் பற்றி கலந்துரையாடக் கூடினர். 2021 ஆம் ஆண்டு ஒரு கடுமையான போராட்டத்தின் போதே பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது தோட்டத்தில் வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் டசின் கணக்கான தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
'ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை எதிர்த்திடு!' என்ற அறிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்ததுடன் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அணிதிரள வேண்டிய அவசரத் தேவையை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரும் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினருமான கே. காண்டீபன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் சோ.ச.க.யும் எவ்வாறு விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை ஒரு தசாப்தத்திற்கும் முன்பே கணித்திருந்தன என்பதை விளக்கினார்.
2011 இல் வெளியிடப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆவணத்திலிருந்து அவர் மேற்கோள் காட்டினார்: “கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனாவின் எழுச்சி, ஓரளவிற்கு இந்தியாவின் எழுச்சி, உலக அரசியலின் ஈர்ப்பு மையத்தை ஆசியாவை நோக்கி வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. சீனா 1990 இல் உலகின் 10 வது பெரிய பொருளாதாரத்திலிருந்து உயர்ந்து 2010 இல் ஜப்பானை முந்தியதுடன் அமெரிக்காவிற்குப் பிறகு இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது. ...
“. . . ஒரு பேரழிவு மோதலுக்கு இட்டுச் செல்லும் இந்தப் போட்டியில் இலங்கை உட்பட ஆசியாவின் ஒவ்வொரு மூலையும், தவிர்க்க முடியாமல் சிக்கியுள்ளது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை மையமாகக் கொண்ட முதல் இரண்டு உலகப் போர்களைப் போலல்லாமல், ஒரு புதிய போர் தீ இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.”
ஒரு தொழிலாளியான தேவி, “போர் நிறுத்தப்பட வேண்டும். போர் நமக்கு மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எங்களைப் போன்ற தொழிலாளர்களே மற்ற நாடுகளிலும் வாழ்கின்றனர். போரினால் அதிகம் இறப்பது தொழிலாளர்கள்தான்,” என்றார்.
“இலங்கையில் உள்ள தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். போர் வெடித்தால், அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடையும்,” என்று செல்வகுமாரி கூறினார்:
தேவசகாயம் கூறியதாவது: “வரவிருக்கும் காலகட்டத்தில் சோசலிசப் புரட்சி ஒன்று இல்லாவிட்டால், மனிதகுலத்தின் கலாச்சாரத்தை ஒரு பேரழிவு அச்சுறுத்தும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். முதலாளித்துவம் ஒருபோதும் அமைதிக்குச் செல்லாது. அவர்கள் ஆயுத உற்பத்தியைக் கைவிடப் போவதில்லை. முதலாளித்துவத்திற்கு போர் தேவை. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கியெறியாமல் போரை நிறுத்த முடியாது. அது தூக்கியெறியப்பட வேண்டுமானால், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் அவசியம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல், அனைத்து தோட்டங்கள், நகரங்கள், மருத்துவமனைகள் மற்றும் வேலைத் தளங்களிலும் நாம் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். போர் எதிர்ப்பு இயக்கத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.”
கூட்டத்தின் முடிவில், அனைத்து பங்கேற்பாளர்களும் மார்ச் 17 அன்று கூட்டத்தில் இணைந்துகொள்ள உறுதியளித்ததுடன் பலர் தங்கள் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள அறிக்கையின் தமிழ் மொழி நகல்களை எடுத்துச் சென்றனர்.
மேலும் படிக்க
- கொழும்பில் சோ.ச.க./IYSSE பகிரங்க கூட்டம்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து!
- இலங்கையில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை கண்டிக்கின்றனர்
- ஈரானுக்கு எதிரான போர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது
- இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததைக் கண்டனம் செய்! ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!
