புதிய தடுப்பு ஏரியால் இரண்டாவது வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் நேபாளப் பேரழிவில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்திலுள்ள தேவிகாட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கிற்குப் பின்னர், வெள்ளத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனையோர் பார்வையிடுகின்றனர், வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2026. [AP Photo/Rajesh Kumar Singh]

புதன்கிழமை நேபாளத்தின் வடக்கு எல்லைப் பிராந்தியத்தைத் தாக்கிய பேரழிவுகரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, செப்டெம்பர் 5 அன்று நிலவரப்படி குறைந்தபட்சம் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,600 பேர் காணாமல் போயுள்ளனர். திபெத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 588 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளம், பனியால் மூடப்பட்ட இமயமலைச் சரிவொன்றிலிருந்து ஏற்பட்ட பாரிய பனிமலை சரிவால் தூண்டப்பட்டது. இந்தப் பேரழிவு, தீவிரமடைந்து வரும் பூகோள வெப்பமயமாதல், போதிய பொதுமக்கள் பாதுகாப்புத் தயாரிப்பின்மை மற்றும் சர்வதேச அளவில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசாங்கங்களின் புறக்கணிப்புடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புபட்டுள்ளது.

திபெத்தில் பனிப்பாறையால் மூடப்பட்ட ஒரு சரிவிலிருந்து ஒரு பாரிய தொகுதி பிரிந்து, கீழேயுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக செயற்கைக்கோள் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பனிச்சரிவு மிகவும் பாரியதாக இருந்ததால், அது ஜேர்மனியில் உள்ள கருவிகளாலும் அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பாலும் (USGS) ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவாகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அதிர்வு சமிக்ஞையை உருவாக்கியது.

சரிந்து வந்த பாரிய பனிமலைத் தொகுதி பள்ளத்தாக்கு வழியாக கீழே இறங்கும்போது, பாறைகள், மண் மற்றும் சிதைவுப் பொருட்களைத் திரட்டிக்கொண்டே சென்று, பின்னர் ஒரு ஆற்றை மறித்து ஒரு தற்காலிக அணையை உருவாக்கியது. அந்தத் தடுப்பை நீர் உடைத்துச் சென்றபோது அல்லது அதன் மேல் பெருக்கெடுத்து பாய்ந்தபோது, அது நேபாள-சீன எல்லையின் இருபுறங்களிலும் உள்ள நகரங்கள், குடியிருப்புகள், வீதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் வழியாக, பாரிய பாறைகள் மற்றும் சேறு அடங்கிய ஒரு பெரும் வெள்ளப் பெருக்கை கீழ்நோக்கி அனுப்பியது.

வீதிகள் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனவர்களில் அடங்குகின்றனர். கணக்கில் வராதவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளனர். அவர்களில் 517 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என உத்தியோகபூர்வ மதிப்பீடு தெரிவிக்கிறது.

இதற்கிடையில், இந்தப் பனிச்சரிவும் நிலச்சரிவும், சோக்யால் மற்றும் புருப்கியாங்சாங்பு ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு தடுப்பு ஏரியை உருவாக்கியுள்ளன. ஆற்றின் ஓட்டத்தை இந்தத் தடுப்பு மறித்ததுடன், வேகமாக அதிகரித்து வந்த நீரின் பெரும் தொகுதியைத் தேக்கி வைத்ததால், நிலச்சரிவினால் உருவான இந்த அணை “உடைந்து செல்லும் அதிக ஆபத்தை” எதிர்கொள்வதாக சீன நீர்வள அதிகாரிகள் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.

இந்த ஏரியில் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் நீர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாட்களில் மேலும் 3 மில்லியன் கன மீட்டர் வரை நீர் தேங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய நீர்க் குவிப்பானது மண் மற்றும் சிதைவுப் பொருட்களால் உருவான இயற்கையான அணை திடீரென அரிக்கப்பட்டு, தேங்கியுள்ள நீரை அழிவுகரமான வெள்ளப் பெருக்காக கீழ்நோக்கி வெளியேற்றக்கூடிய ஒரு பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

வெள்ள நீரானது தடுப்பை மீறிப் பெருக்கெடுப்பதால் ஏற்படும் உடனடி ஆபத்தை சமாளிக்க முடியும் என சீன அதிகாரிகள் மதிப்பிட்டதைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதித்தனர். இருப்பினும், முதல் வெள்ளப் பெருக்கினால் ஏற்கனவே சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், நிலையற்ற சரிவுகள், தடுக்கப்பட்டுள்ள ஆறுகள் மற்றும் நீரில் ஊறி நிலையற்றுப் போயுள்ள சிதைவுப் பொருட்களால் ஏற்படும் அடிப்படை ஆபத்து நீங்கவில்லை.

காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட பிராந்திய காலநிலை மற்றும் மலை ஆராய்ச்சி நிறுவனமான சர்வதேச ஒருங்கிணைந்த மலை அபிவிருத்தி மையம் (ICIMOD), இந்தப் புதிய தடுப்பானது இமயமலையின் ஆற்று அமைப்புகள் முழுவதும் நிலவும் பரந்த ஆபத்தின் ஒரு பகுதியாகும் என்று எச்சரித்துள்ளது. தற்காலிக ஏரிகள் உருவாவதானது, ஆரம்பகட்ட பனிச்சரிவை, நீடிக்கும் அவசரநிலையாக மாற்றக்கூடும். இதனால் கீழ்நோக்கிய பகுதிகளில் வாழும் மக்கள் இரண்டாவது திடீர் வெள்ளப் பெருக்கின் ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.

தேடுதல் குழுக்கள் சேறு, பாறைகள் மற்றும் அழிவடைந்த கட்டமைப்புகளின் கீழ் புதையுண்ட நிலப்பரப்புகளில் பணியாற்றி வருகின்றன. சேதமடைந்த சாலைகள், நிலையற்ற நிலப்பரப்பு மற்றும் மேலும் வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் தொடர்ச்சியான ஆபத்துகளும் அவர்களது பணியை மேலும் கடினமாக்குகின்றன. சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட ஏராளமான காணொளிகள், மீட்புப் பணியாளர்கள் சேற்றால் மூடப்பட்ட உயிர்தப்பியவர்களைத் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டுகின்றன.

மீட்புப் பணியாளர்கள், நீர் மற்றும் சேற்றால் மூழ்கடிக்கப்பட்ட குடியிருப்புகளின் எஞ்சிய பகுதிகளில், உயிர்தப்பியவர்களைத் தேடியும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தப்பித்தவர்கள் அதீத ஆபத்தான நிலைமைகளின் கீழேயே தப்பிச் சென்றுள்ளர். சமூக ஊடகக் காணொளிகளில் காட்டப்படுவது போல், சேற்று நீர், பாறைகள் மற்றும் சிதைவுப் பொருட்களைக் கொண்ட ஒரு பாரிய வெள்ளப் பெருக்கு குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக வேகமாகப் பாய்ந்ததால், தப்பிச் செல்வதற்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது.

தடுப்பு ஏரியால் ஏற்படும் உடனடி ஆபத்து குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் மீண்டும் தேடுதல் பணிகளைத் தொடங்கியுள்ளன. நிலச்சரிவுகள், ஆற்றில் ஏற்படும் திடீர் பெருக்குகள் மற்றும் மேல்நோக்கிய பகுதிகளில் உள்ள சிதைவுப் பொருட்களால் உருவான அணைகள் உடைந்து போகக்கூடிய சாத்தியம் ஆகியவற்றால், மீட்புப் பணியாளர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் இருவருக்கும் தற்போதும் ஆபத்து நிலவுகின்ற நிலையிலேயே இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகள் இந்தப் பனிப்பாறைச் சரிவை உடனடி தூண்டுதலாக அடையாளம் கண்டுள்ள போதிலும், பரந்த அடிப்படைக் காரணம் உலகளாவிய வெப்பமயமாதலின் கீழ் உயரமான மலைப் பிரதேசங்களின் தீவிரமடைந்து வரும் நிலையற்ற தன்மையே ஆகும். ICIMOD இன் பேரிடர்-ஆபத்துக் குறைப்பு நிபுணரான சஸ்வதா சன்யால், இந்த நிகழ்வு முன்னெப்போதும் நிகழாத ஒன்றல்ல என்று வலியுறுத்தினார்.

சன்யால் கூறுகையில், “14 மாதங்களில் லெந்தே கோலாவில் இரண்டு முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை, நேபாளப் பகுதியில் உள்ள ஒரு பனிப்பாறையிலிருந்து ஏற்பட்ட பனி-பாறைச் சரிவு ஆற்றை மறைத்து, கீழ்நோக்கி திடீர் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியதால் இது தூண்டப்பட்டது.”

முந்தைய நிகழ்வுகள் எச்சரிக்கைகளாக இருந்ததுடன், முன்னறிவிக்க முடியாத இயற்கையின் ஒரு நிகழ்வைக் காட்டிலும், அறியப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு ஆபத்தையே சுட்டிக்காட்டுகின்றன. இமயமலையின் உயரமான பகுதிகள், குறிப்பாக பூகோள வெப்பமாதலால் பாதிக்கப்படக்கூடியவை என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வெப்பமயமாதலானது பனிப்பாறைகள் சரிவதற்கும், பனிக்கட்டி மற்றும் பாறைகள் நிலையற்றுப் போவதற்கும், மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும், ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதற்கும் பங்களிக்கிறது.

இந்தப் புதிய பேரழிவு, ஒரு பனிப்பாறைச் சரிவு எவ்வாறு ஒரு பனிமலைச் சரிவைத் தூண்டி ஒரு தடுப்பை உருவாக்குகிறது, அந்தத் தடுப்பு எவ்வாறு ஒரு ஏரியை உருவாக்குகிறது, அந்த ஏரி எவ்வாறு இரண்டாவது நீர் மற்றும் சிதைவுப் பொருட்களின் பெருக்கெடுப்புக்கு அச்சுறுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு போதுமான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், வெளியேற்றப் பாதைகள், உறுதியான உள்கட்டமைப்பு மற்றும் பொது வளங்கள் இல்லாதபோது இந்த ஆபத்து மேலும் தீவிரமடைகிறது.

இன்னும் அடிப்படையாகக் கூறுவதானால், வெள்ளிக்கிழமை உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல், “மரணங்கள் மற்றும் அழிவுகளின் அளவை புவியியல் அல்லது வானிலை காரணிகளால் மட்டும் விளக்க முடியாது. இது காலநிலை மாற்றம், அரசாங்கங்களின் பல தசாப்தங்களாக நீடித்த புறக்கணிப்பு, மேலும் பொதுப் பாதுகாப்பு இலாபத்திற்கும் முதலாளித்துவத்தின் வரவு-செலவுத் திட்டக் கோரிக்கைகளுக்கும் கீழ்ப்படுத்தப்பட்டதன் விளைவாகும்.”

அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அளித்துள்ள பதில்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பேரழிவில் உலக ஆளும் வர்க்கங்களின் அலட்சியத்தின் அளவுகோலாகவே உள்ளன. பேரழிவுகரமான திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு அமெரிக்கா “ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது” என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளப் பெருக்கை “பயங்கரமானது” என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்கா நேபாளத்தின் தலைமைத்துவத்துடன் தொடர்புகொண்டுள்ளதாகக் கூறினார். நேபாளத்திற்குத் தேவையான “எதனையும்” வாஷிங்டன் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த “எதனையும்” என்பதில், அவசரகாலத் தங்குமிடம், நிவாரணப் பொருட்கள், நீர், சுகாதாரம் மற்றும் சுத்தம் தொடர்பான உதவிகளை வழங்குவதற்காக கத்தோலிக்க நிவாரண சேவைகள் மூலம் வழங்கப்படும் மிகச் சொற்பமான 500,000 அமெரிக்க டாலர்களும் அடங்குவதாகத் தெரிகிறது.

தனது பங்கிற்கு, ஐரோப்பிய ஒன்றியம் உணவு, சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான நீர், சுகாதார வசதிகள், தங்குமிடம் மற்றும் ஏனைய அவசர நிவாரணங்களுக்காக “அவசரகால மனிதாபிமான உதவி” என்ற பெயரில் 2 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பெறும் பங்காளிகள், ஏற்கனவே முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்குமிடப் பொருட்களையும் நிவாரணப் பொருட்களையும் விநியோகித்து வந்தனர். ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பிரஸ்ஸல்ஸ் அதன் ஆசியாவுக்கான விரைவான பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளரையும் அனுப்பியது.

சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதிலும், அதன் முன்னறியக்கூடிய விளைவுகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளன. தவிர்க்க முடியாத பேரழிவு நிகழும்போது, அவை இத்தகைய அவநம்பிக்கையான சூழ்நிலையில் மிகச் சொற்பமான உதவியையே வழங்குகின்றனர். பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கு, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாரிய உயிரிழப்பும் காணாமற்போதலும், தடுப்பு ஏரியால் தொடர்ந்தும் ஏற்பட்டு வரும் அச்சுறுத்தலும், முதலாளித்துவ அமைப்பின் தோல்வியின் ஒரு குவிமையப்படுத்தப்பட்ட வெளிப்பாடாகும்.

நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்டுள்ள இந்த அவசரநிலையானது வெப்பமடைந்து வரும் இமயமலையால் ஏற்படும் தீவிரமடைந்த நிலையற்ற தன்மை, மிகவும் பலவீனமான பொது உள்கட்டமைப்புடனும், பேரழிவைத் தடுக்கக்கூடிய சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலின் பற்றாக்குறையுடனும் மோதிக்கொண்டிருப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.

Loading